தமிழகம்

மருத்துவமனைகளுக்கு நட்சத்திர தரமதிப்பீடு: அங்கீகார வாரியத் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜானகி எம்ஜிஆர் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத் தலைவர் மகேஷ் வர்மா பேசியதாவது: மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் தரம்,கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 8 இருக்கைகள் கொண்ட பல் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைமைய அந்தஸ்து வழங்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனைகளுக்கு நட்சத்திர தரமதிப்பீடு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ சேவைகள் அடிப்படையில் அதன் தரம் நிர்ணயிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படும். முன்பு மருத்துவ சிகிச்சைகள் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் இருந்தன. தற்போது சிக்கலானதாகவும், சில நேரங்களில் ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கும் இருக்கிறது. தொடர் மருத்துவக் கண்காணிப்பினால் மட்டுமே முழுமையான சிகிச்சையை அளிக்க முடியும். அதனால், மருத்துவ சேவைகள் பாதுகாப்பாகவும், துல்லியமானதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ராமச்சந்திரா உயர்கல்வி நிறுவனத்தின் இணை துணைவேந்தர் மருத்துவர் மகேஷ்வக்கமுடி, பல் மருத்துவக் கல்லூரிமருத்துவமனை தலைவர் மருத்துவர் தமிழ்ச்செல்வன், இந்திய செயற்கை பல் மருத்துவ சிகிச்சை கழக முன்னாள் தலைவர் மருத்துவர் வி.ரங்கராஜன் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT