புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பலாப் பழத்துக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் விளையும் பலாப் பழங்கள் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்தப் பழத்துக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இது குறித்து பலா விவசாயி ப.செல்லதுரை கூறியது: வடகாடு பகுதியில் சுமார் 1.5 லட்சம் டன் பழங்கள் விளைகின்றன. விளையும் பலாப் பழங்கள் தரமாகவும், சுவையாகவும் இருக்கின்றன. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. எனினும், இவற்றை தள்ளு வண்டியில் வைத்தும், தெருவோரம் அடுக்கி வைத்தும் கூவி கூவியே விற்க வேண்டிய நிலை உள்ளது.
இப்பழத்துக்கு புவிசார் குறியீடு பெற்றால் சந்தைப்படுத்துதல் எளிதாக இருக்கும் என்பதால் புதுக்கோட்டை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற மதுரை அரசு வேளாண் கல்லூரி முதல்வர் கே.வைரவன் கூறியது: வடகாடு பகுதியில் விளையும் பலாப்பழத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்தால் உலகெங்கிலும் இருந்து இந்தப் பழங்களை வாங்குவதற்கு நுகர்வோர் முன்வருவார்கள். உள்ளூரில் தொழிற்சாலைகள் உருவாகும். பலா லாபகரமான தொழிலாக மாறும். வருமானமும் அதிகரிக்கும்.
எனவே, வடகாடு பகுதியில் விளையும் பலாப் பழத்துக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான பணியை தொடங்கி உள்ளோம். மேலும், பலாப்பழ விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோரை உள்ளடக்கி ஓரிரு நாளில் ஆலோசனை கூட்டம் நடத்தி அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. புவிசார் குறியீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். பலாப்பழ விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோரை உள்ளடக்கி ஓரிரு நாளில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.