திருவண்ணாமலை: தூய்மை அருணை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வரலாற்று புகைப்பட கண்காட்சி திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் கம்பன், ஸ்ரீதரன், கார்த்தி வேல்மாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நடிகர் ஜெயம் ரவி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “புகைப்பட கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சகாப்தத்தை கண் முன்பு காண்பித்து உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயராக இருந்ததில் இருந்து பல்வேறு சேவைகளை செய்து வருகின்றார். சிறப்பாக ஆட்சி நடத்துகிறார். முதல்வரின் மனதை வெளிகாட்டும் வகையில் புகைப்பட கண்காட்சி உள்ளது. தமிழகத்தில் பல நல்லவிதமான மாற்றங்கள் நடைபெறுகின்றன. மேலும் பல மாற்றங்கள் வர வேண்டும்” என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகராட்சி மன்றத் தலைவர் நிர்மலாவேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலை வாணி கலைமணி, பரிமளா கலையரசன், அன்பரசி ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.