திருநெல்வேலி: திருநெல்வேலியில் பறை இசைக் கருவிகளுடன் அரசு பேருந்தில் பயணித்த மாணவியை நடுவழியில் இறக்கிவிட்ட விவகாரத்தில் பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த மாணவி ரஞ்சிதா. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊரிலிருந்து பறை இசை கருவிகளை கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவில் சொந்த ஊருக்கு பறையிசை கருவிகளுடன் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார்.
அப்போது இசைக் கருவிகளை கொண்டு செல்ல அப்பேருந்தில் இருந்த நடத்துநர் ஆர். கணபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பறை இசைக் கருவிகளுடன் பேருந்தில் பயணிக்கக் கூடாது என்று தெரிவித்து வாக்குவாதமும் செய்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் வண்ணார்பேட்டைக்கு வந்த அப்பேருந்திலிருந்து நடுவழியில் மாணவி ரஞ்சிதா இறக்கிவிடப்பட்டார்.
பாதி வழியில் தன்னந்தனியாக இறக்கிவிடப்பட்ட மாணவி கண்ணீருடன் காத்திருந்தது குறித்து தெரியவந்ததும் தன்னார்வலர்களும், செய்தியாளர்களும் அங்குவந்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் திருநெல்வேலியிலிருந்து கோவைக்கு சென்ற பேருந்தில் அவரை பறைஇசைக் கருவிகளுடன் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு நடத்துநர் கணபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையை அடுத்து நடத்துநர் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் திசையன்விளை பணிமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.