ஜிப்மர் மருத்துவமனை 
தமிழகம்

காப்பீட்டு திட்டத்தில் வராத நோயாளிகளுக்கான கட்டண அறிவிப்பு ஒத்திவைப்பு - ஜிப்மர் அறிவிப்பு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் அறிவிப்பை ஜிப்மர் ஒத்திவைத்துள்ளது.

ஜிப்மரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேம்பட்ட உயர் மதிப்பு விசாரணைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என ஜிப்மர் அறிவித்தது.

மொத்தம் 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ரூ.500 முதல் ரூ. 12 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் கட்டணம் நடைமுறைக்கு வரவில்லை. இக்கட்டணம் அதிகமாக இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை மத்திய அமைச்சரிடம் தெரிவித்திருந்தார். அறிவிப்பை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின.

இந்நிலையில் அனைத்து துறைகளின் தலைவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பாளர் அனுப்பிய உத்தரவு: "பெரும்பாலான புதிய மேம்பட்ட உயர் மதிப்பு சிகிச்சைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால் புதிய மேம்பட்ட உயர் மதிப்பு விசாரணைகளுக்கான கட்டண அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். இவ்வுத்தரவு ஜிப்மர் இயக்குநர் ஒப்புதலின் படி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT