சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், சுத்தமான தண்ணீரில் வளரக்கூடிய ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன்மூலம் டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால், மாநிலம் முழுதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கையிருப்பில் போதிய மருந்துகள்: இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்கி, அதில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும். ஆரம்பத்திலேயே தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும் இடங்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்கவும், போதிய அளவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்காமல்...: திறந்தவெளியில் சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், வாளி, டயர்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கடைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அங்கு டெங்குவை பரப்பு ம் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி யாகும் சூழல் இருந்தால், அதனை அகற்றி சரிசெய்யும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொசுக்களின் உற்பத்திக்கு காரணமாக டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை அகற்ற வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடு சுற்றுப்புறங்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.