சேலம் மாநகர போக்குவரத்து போலீஸாருக்கு கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் கழுத்தில் அணியக்கூடிய நவீன ஃபேன்களை மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி நேற்று வழங்கினார். உடன் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா உள்ளிட்டோர். படம்: எஸ். குரு பிரசாத் 
தமிழகம்

வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள மாநகர போக்குவரத்து போலீஸாருக்கு கழுத்துப் பட்டை ஃபேன் வழங்கல்

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாநகர காவல் துறையில் போக்குவரத்துப் பிரிவில் பணிபுரியும் போலீஸார் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும்விதமாக கழுத்துப் பட்டை ஃபேனை, மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி வழங்கினார்.

சேலம் மாநகர பகுதியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. பகலில் வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. சேலம் மாநகரப் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் ஆட்சியர் அலுவலகம் அருகே ரவுண்டானா, முள்ளுவாடி கேட், நான்கு ரோடு, ஐந்து ரோடு, ஜவுளிக் கடை பேருந்து நிறுத்தம், அஸ்தம்பட்டி ரவுண்டானா, சூரமங்கலம் உள்பட மாநகரின் முக்கிய சந்திப்புகளில் நின்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடுமையான வெயிலில் வெகு சிரமத்துடன் போக்குவரத்து போலீஸார் பணியாற்றி வரு கின்றனர். இதனால், மாநகர காவல் துறை சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, போக்குவரத்து போலீஸாருக்கு நீர் மோர், கூலிங்கிளாஸ் வழங்கி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, நேற்று ஐந்து ரோடு ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து போலீஸாருக்கு கழுத்து பட்டை ஃபேன் வழங்கினார். வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸார், இந்த கழுத்து பட்டை ஃபேனை அணிந்து கொள்ளும் நிலையில், அவர்களின் கழுத்துப் பகுதியில் சிறிய ஃபேன் இயங்கும்.

இதனால், வெயிலின் உக்கிரத்தில் இருந்து போலீஸார் தங்களை தற்காத்துக் கொண்டு பணிபுரிய ஏதுவான சூழலை மாநகர காவல் துறை சார்பில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநகர காவல் துறை சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, போக்குவரத்து போலீஸாருக்கு நீர் மோர், கூலிங்கிளாஸ் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT