விருதுநகர்: தொடர் மழை காரணமாக, விருதுநகர் அருகே 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்மாய் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்வதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், செங்குன்றாபுரம் அருகே உள்ள எல்லிங்கநாயக்கன்பட்டியில் குமரங்குளம் கண்மாய் உள்ளது. சுமார் 25 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த கண்மாய்க்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் சிறு சிறு ஓடைகளிலும், வாய்க்கால்களிலும் வந்து சேருவது உண்டு. தற்போது விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக எல்லிங்க நாயக்கன்பட்டியில் உள்ள குமரங்குளம் கண்மாய்க்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்ததால் குமரங்குளம் கண்மாய் நிரம்பியது.
அதோடு, தொடர்ந்து நீர்வரத்து காரணமாக நேற்று காலை இக்கண்மாயில் தண்ணீர் மறுகால் பாய்ந்தோடியது. இதைப் பார்த்த விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இக்கண்மாய் 10 ஆண்டுகளுக்கு பின்பு மறுகால் பாய்கிறது. இந்தக் கண்மாய் மூலம் சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கண்மாய் தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்தி நிலத்துக்குக் கொண்டு சென்று கோடை உழவுப்பணியைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தனர்.