சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி ஆகியோருக்கு தனது ஜெர்சியை வழங்கி சிஎஸ்கே அணி கேப்டன் தோனி கவுரவித்தார்.
தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி ஆகியோரை சிஎஸ்கே அணி கேப்டன் தோனி நேற்று சென்னையில் சந்தித்தார். அப்போது, ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் மற்றும் பொம்மன்-பெள்ளி தம்பதியை கவுரவப்படுத்தும் விதமாக தனது ஜெர்சியை அவர்களுக்கு வழங்கினார்.
இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெறும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, சேப்பாக்கம் மைதானத்தில் இவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில், இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் மற்றும் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு நினைவு பிரிசு வழங்கி கவுரவப்படுத்தும் சிஎஸ்கே நிர்வாகம், முதுமலை புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நிதி உதவியும் அளிக்க உள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலைப் பகுதியைச் சேர்ந்தவர் பொம்மன் (52). பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான இவர் வனத்துறையில் 1984-ம் ஆண்டு முதல் யானைப் பாகனாக பணியாற்றி வருகிறார். வனத்துறை வழிகாட்டுதல்படி முதுமலை யானைகள் பராமரிப்பு மையத்தில் யானைகள் பராமரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி பெள்ளியும் யானைகள் பராமரிப்பில் பொம்மனுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார். யானைகளுடனான தங்களின் அனுபவங்களை இந்த தம்பதியர் பகிர்ந்து கொள்ளும் வகையில் கார்த்திகி என்ற குறும்பட இயக்குநர், ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற பெயரில் எடுத்த குறும்படம் ஆஸ்கர் விருதை பெற்றது.