சென்னை: விசிகவின் மறுசீரமைப்பு குறித்து உயர்நிலை குழு கூட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. விசிக விரைவில் மறுசீரமைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதையொட்டி, கட்சி பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் 25 சதவீதம் இளைஞர்கள், தலா 10 சதவீதம் பெண்கள், பட்டியலினத்தைச் சாராதவர்களை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி செயலாளர்கள் பொறுப்பு வழங்க உள்ள மாவட்டங்களில் முதல்கட்டமாக 17 மாவட்டங்களின் பெயர்களையும் திருமாவளவன் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து மீதமுள்ள மாவட்ட மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த கட்சியின் உயர்நிலை குழு கூட்டம், சென்னை, அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் திருமாவளவன் தலைமையில் நேற்று நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.