கிருஷ்ணகிரி/தருமபுரி: போச்சம்பள்ளி பகுதியில் பெய்த தொடர் மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த 500 ஏக்கர் நெற்கதிர்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் மூலம் நேரடியாக 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில், கிருஷ்ணகிரி அணையின் கீழ் 9,012 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் நிலத்தடி நீர் மட்டமும் அதிகரித்தது. இதனால், தென்பெண்ணை ஆற்று பாசனம் மற்றும் நிலத்தடி நீர் பாசன பகுதியில் விவசாயிகள் கடந்த டிசம்பர், ஜனவரியில் 2-ம் போக நெல் சாகுபடி பணியை மேற்கொண்டனர்.
குறிப்பாக, போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, என்.தட்டக்கல், வேலம்பட்டி, சந்தூர், வெப்பாலம்பட்டி, அனகோடி மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், போச்சம்பள்ளி பகுதிகளில் பெய்த தொடர் மழைக்கு அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வயல்களில் தேங்கிய நீரில் நெற்கதிர்கள் மூழ்கின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக என்.தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால், நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் கதிர்கள் சாய்ந்து தேங்கிய மழைநீரில் மூழ்கின. மேலும், நீரில் மூழ்கிய நெல் மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கி உள்ளன. சுமார் 500 ஏக்கரில் நெற்கதிர்கள் சேதமாகியுள்ளது.
வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மழையளவு விவரம்: இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதியில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்:
சின்னாறு அணை 63, சூளகிரி 59, நெடுங்கல் 28, தேன்கனிக்கோட்டை 18.2, கிருஷ்ணகிரி அணை 14.2, தளி 10, போச்சம்பள்ளி 9, பாரூர் 4, கெலமங்கலம் 2, கிருஷ்ணகிரி 1.2 மிமீ மழை பதிவானது.
தென்பெண்ணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையை தொடர்ந்து வேப்பனப்பள்ளி அருகேயுள்ள மார்க்கண்டேயன் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மாரசமுத்திரம் தடுப்பணை நிரம்பி கடந்த 3 நாட்களாக கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.
மாரண்டஅள்ளியில் 27.8 மி.மீ.மழை: தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியில் நேற்று முன்தினம் இரவு 27.8 மிமீ மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. அதிகபட்சமாக மாரண்டஅள்ளி பகுதியில் 27.8 மி.மீட்டர் மழை பதிவானது. அதேபோல, தருமபுரியில் 12 மி.மீ., ஒகேனக்கல்லில் 1 மிமீ மழையும் பதிவானது. இதர சில பகுதிகளில் மிதமான தூறலுடன் கூடிய மழை பெய்தது.