தமிழகம்

போலி விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம்: தி இந்து உங்கள் குரலில் வாசகர் ஆதங்கம்

செய்திப்பிரிவு

போலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தை நம்பி ஏமாந்த வாசகர் ஒருவர் இதுபோன்ற விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று 'தி இந்து'வின் 'உங்கள் குரல்' வசதி மூலம் தெரிவித்துள்ளார்.

>'தி இந்து' வின் 'உங்கள் குரல்' வசதியை பயன்படுத்தி வாசகர் ஒருவர் கூறியிருப்பதாவது:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்று காகித கப் தயாரிப்பு இயந்திரம் குறித்த விளம்பரம் வெளியிட்டு இருந்தது. அதில் இயந்திரத்தை நிறுவனத்திடமிருந்து வாங்கினால் காகித கப் தயாரிப்புக்கு தேவையான மூல பொருட்களை தருவதாகவும் மற்றும் தயாரித்த பொருளை நிறுவனமே விற்று தரும் என்று குறிப்பிட்டு இருந்தது.

அந்த விளம்பரத்தை நம்பி டெல்லிக்கு சென்று ரூ.1.80 லட்சம் கொடுத்து இயந்திரம் வாங்கினேன். மூலப் பொருட்களைக் கொண்டு சுமார் 50 ஆயிரம் காகித கப் தயாரித்து கொடுத்தேன். ஆனால் நிறுவனம் ஒப்புக்கொண்ட அடிப்படையில் பொருளை விற்பனை செய்து கொடுக்கவில்லை.

பல முறை நிறுவனத்தை தொடர்பு கொண்டும் எந்த பலனும் இல்லை. நேரில் சென்று பார்த்த போது அந்த நிறுவனம் இருந்ததற்கான எந்த சுவடும் இல்லை. தற்சமயம் இயந்திரத்தை வைத்து கொண்டு வேலை இல்லாமல் உள்ளேன். என்னை போல் யாரும் போலி விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் என்றார்.

தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் பி. சடகோபன் கூறு கையில் ''விளம்பரங்களை முறைப் படுத்துவதற்கு தற்போது வரை எந்த சட்டமும் இல்லை. நுகர்வோர்களை திசைதிருப்பும் போலி விளம்பர நிறு வனங்களை முறைப்படுத்துவதற்கு அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும்'' என்றார்.

''பொது மக்கள் விளம்பரங்களை பார்த்து பொருள் வாங்கி ஏமாற்றப்பட்டு இருந்தால் அந்த விளம்பரம் வெளியிடப் பட்ட பத்திரிகை அல்லது காணொளி சான்று மூலம் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். பெரும்பாலான நுகர்வோர்கள் முன் எச்சரிகையுடன் செயல்பட வேண்டும்'' என்று சென்னை நுகர்வோர் நீதிமன்ற வழக்கறிஞர் பழனியப்பன் கூறினார்.

SCROLL FOR NEXT