டாஸ்மாக் கடையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் புவனகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 
தமிழகம்

புவனகிரி அருகே டாஸ்மாக் கடையில் மின்சாரம் தாக்கி கொத்தனார் உயிரிழப்பு: கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகை

செய்திப்பிரிவு

கடலூர்: புவனகிரி அருகே டாஸ்மாக் கடையில் மின்சாரம் தாக்கி கொத்தனார் உயிரிழந்தார். உரிய நிவாரணம் கேட்டு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

புவனகிரி அருகே கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராமன் (45), கொத்தனார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராஜாராமன் நேற்று முன்தினம் இரவு புவனகிரி அருகே உள்ள குரியாமங்கலம் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தார்.

அப்போது அப்பகுதியில் திடீரென மழை பெய்ததால் அவர் டாஸ்மாக் கடையிலேயே நின்றார். அப்போது அங்கிருந்த இரும்பு கம்பத்தை பிடித்தார். அதிலிருந்து வந்த மின்சாரம் தாக்கி ராஜாராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஊழியர்களிடம் வாக்குவாதம்: அருகில் இருந்தவர்கள் இதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். அங்கு வந்த ஒரு சிலர், “இந்த கம்பத்திலிருந்து மின்சாரம் வருகிறது என்று நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பே கூறினோம். நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் ராஜாராமன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்க மாட்டார்” என்று கூறி டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீஸார் ராஜாராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மின் கசிவை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் கடையை திறக்கக் கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் நேற்று காலை ராஜாராமன் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் புவனகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்; அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையறிந்த சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். கம்பத்திலிருந்து மின்சாரம் வருகிறது என்று தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

SCROLL FOR NEXT