தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வரலாற்றில் முதன் முறையாக கடந்த 49 நாட்களில் உண்டியல் காணிக்கை ரூ. 4.70 கோடி கிடைத்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடைசியாக மார்ச் 15-ம் தேதி உண்டியல்காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதன்பின் மே 4, 5-ம் தேதிகளில் இப்பணி நடைபெற்றது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை வகித்தார். கோயில் இணை ஆணையர் கார்த்திக்,உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறநிலையத்துறை ஆய்வாளர்கள் செந்தில் நாயகி, பகவதி, முருகன், சிவகாசி பதினென் சித்தர் மடம் குழுவினர்,தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கலம் ஆஞ்ச நேயர் உழவாரப் பணி குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.4,65,72,815, கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.46,475-ம், யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1,09,543, சிவன் கோயில் உண்டியல் மூலம் ரூ.2,28,373,
வெயிலுகந்த அம்மன் கோயில் உண்டியல் மூலம் ரூ.52,299 என, மொத்தம் ரூ.4,70,09,505 கிடைத்தது. தங்கம் 2,910 கிராம், வெள்ளி 42,750 கிராம், வெளி நாட்டு கரன்சிகள் 977 ஆகியவையும் கிடைத்தன. ஏப்ரல் மாதம் கோடை கால விடுமுறை தொடங்கியதால், பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலைமோதுகிறது. இதனால் கோயில் வரலாற்றில் முதன் முறையாக உண்டியல் காணிக்கை ரூ.4.70 கோடியைத் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.