கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் ஆபத்தான நிலையிலுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து வரும் தரமற்ற குடிநீரை உபயோகப்படுத்துவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கும்பகோணத்தில் திருவலஞ்சுழி ஏழுமாந்திடல் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 110 நரிக்குறவ மக்களுக்காகத் தொடக்கப் பள்ளி, சத்துணவு கூடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சுகாதார வளாகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றது.
இந்நிலையில், இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்தத் தொட்டி தூண்கள் மற்றும் மேற்புறமுள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து உடையும் நிலையில் உள்ளது. இதில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறத்துடன் துர்நாற்றத்துடன் வருகிறது. எனினும், தண்ணீருக்கு வேறு ஆதாரம் இல்லாததால் வேறு வழியின்றி அப்பகுதி மக்கள் இந்த துர்நாற்ற தண்ணீரையே பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றி விட்டு, தரமான வகையில் தொட்டி கட்டி, சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் த.சுந்தர் கூறியது: “இங்கு கடந்த 2003-ம் ஆண்டு குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டிலிருந்து, இந்த தொட்டி சுத்தம் செய்யாமலும், பராமரிப்பு மேற்கொள்ளாமலும் இருந்து வருகின்றது. இந்த நிலையில், இந்தத் தொட்டியை தாங்கி நிற்கும் 4 தூண்களில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து, தொட்டியின் மேற்பரப்பில் தண்ணீர் வெளியேறுகிறது.
மேலும், அரை தொட்டி அளவில் தண்ணீர் நிரம்பியவுடன், சுவரின் ஒரங்களில் தண்ணீர் கசிவதால், தினந்தோறும் ஏராளமான தண்ணீர் வீணாகுகின்றது. தொட்டிக்குள் பாசிகள் படர்ந்துள்ளதால், விநியோகம் செய்யும் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் துர்நாற்றத்துடன் வருகிறது. வேறு வழியில்லாமல் அந்தத் தண்ணீரை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு, எங்களது அவல நிலையை அறிந்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.