சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான மேம்பாட்டு கட்டணம் ரூ.90 முதல் ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் அந்தந்த விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு ஏற்றபடி, உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையமேம்பாட்டு கட்டணம் (யூசர் டெவலப்மெண்ட் ஃபீஸ்) வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் மாறுபடும்.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிக்கு ரூ.205-ம், சர்வதேச விமான பயணிக்கு ரூ.300-ம், விமான நிலைய மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணத்தை மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.
விமான கட்டணத்துடன் வசூலிப்பு: அதன்படி, சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிக்கு ரூ.295-ம்,சர்வதேச பயணிக்கு ரூ.450-ம் வசூலிக்கஉத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விமானநிலைய மேம்பாட்டு கட்டணம் பயணிகளிடம், விமான டிக்கெட் கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கப்படும்.
பின்னர், விமான நிறுவனங்கள் பயணிகளிடம் வசூலித்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை இந்திய விமான நிலையஆணையத்திடம் ஒப்படைக்கும். இந்தகட்டண உயர்வு சென்னை விமான நிலையம் உட்பட நாடு முழுவதும் உள்ளஅனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அமுல்படுத்தப்படுகிறது.