சென்னை: சித்திரை முழு நிலவு நாளை முன்னிட்டு, கண்ணகி, தொல்காப்பியர் சிலைகளுக்கு அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
சித்திரைத் திருவிழா முழுநிலவு நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கண்ணகியின் உருவச் சிலைக்கு, அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்கு சமூக நலத்துறை அமைச்சர்பி.கீதாஜீவன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதே போல், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொல்காப்பியர் சிலைக்கு தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் கீதா ஜீவன், பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வுகளில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா. துணைமேயர் மு.மகேஷ்குமார், செய்தித்துறை இயக்குநர் மோகன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள், செய்தித்துறை கூடுதல் இயக்குனர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.