சென்னை: தமிழகத்தில் 2.96 லட்சம் டன் பருப்பு வகைகள் இருப்பு உள்ளதாக உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். இயற்கைச் சீற்றங்களால் உற்பத்தி குறைவு மற்றும் பதுக்கல் காரணமாக உணவுப் பொருட்களின் விலை அவ்வப்போது உயரும். அப்போது, அரசின் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில், வெளிச் சந்தையில் இருந்து உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து, மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும்.
இதையொட்டி, தமிழகத்தில் பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், பொன்னேரி அருகில் உள்ள அழிஞ்சிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பருப்பு கிடங்கில், உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் துறைமுகங்கள் இருப்பதால், வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பருப்பு கூட இங்குதான் சேமிக்கப்படுகிறது. அவற்றை 4 மாதங்களுக்கு மேல் இருப்பு வைக்கக்கூடாது. கடைகளுக்கு அனுப்பினால்தான் விலை கட்டுக்கள் இருக்கும். தமிழக அரசின் நடவடிக்கைகளால் வெளிச்சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.138-ஆக இருந்த துவரம் பருப்பு தற்போது ரூ.132-ஆக குறைந்துள்ளது. அதேபோல, உளுந்து விலையும் குறைந்து வருகிறது. வரும் 10-ம் தேதி இறக்குமதியாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிடங்குகளிலும் தினசரி பருப்பு வகைகளின் இருப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தற்போதைய நிலையில் மொத்தம் 2.96 லட்சம் டன் பருப்பு இருப்பு உள்ளது.
இவற்றை சில்லறை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். பருப்பு வகைகளை கிடங்குகளில் பதுக்கி வைக்கக்கூடாது. அப்படி பதுக்கி வைத்தால், அவற்றை பறிமுதல் செய்து சந்தைக்கு அனுப்பமுடியும். எனினும், தற்போது அந்த நிலை இல்லை.
நாடு முழுவதும் கடந்த 2, 3 மாதங்களாக நிறைய இருப்பு வைத்து, வெளிச்சந்தையில் குறைந்த அளவு வெளியிடுகின்றனர். மக்களுக்கு அன்றாடம் பயன்படும் பொருட்களை பதுக்கி வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். மேலும், தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடைகளில் தற்போது பருப்பு வகையில் தட்டுப்பாடும் இல்லை.
தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றுக்கு அனுப்பப்படும் பொருட்களில் குறை இருந்தால், உடனடியாக திருப்பி அனுப்புமாறும், அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.