தமிழகம்

பல்வேறு துறைகளில் சாதனை படைக்க அரசின் வளர்ச்சிக்கு மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக் கொண்டு அரசின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பிலான திறன் போட்டிகள் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது: கல்வி பயிலும் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்வதற்காகவே ‘நான் முதல்வன்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் படிக்கும்போதே மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்கிஅவர்களின் திறன் மேம்படுத்தப்படுகிறது.

இத்தகைய திறன்சார் பயிற்சிகளை பரவலாக வழங்கும்போது மாணவர்களுக்கு பல்வேறு துறைகள் குறித்த விழிப்புணர்வும், அவர்களின் தனித்திறன் அறிந்து ஊக்குவிக்கவும் வழிசெய்யும். இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு 32-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மேலும், மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக் கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைக்க அரசுக்கு துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் உயர்கல்வித் துறைஅமைச்சர் க.பொன்முடி பேசும்போது, ‘‘நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களை நேரடியாக தொழிற்சாலைகளுக்கு அழைத்து சென்று கற்று தரப்படுகிறது. இத்தகைய வாய்ப்புகளை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுய முயற்சியில் சிறு, குறு தொழில்களை நீங்களே உருவாக்கி கொள்ள வேண்டும். மேலும், இந்நிகழ்வுக்கு வந்துள்ள தொழிலதிபர்களும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இத்தகைய கண்காட்சிகளை நடத்த வேண்டும்’’என்றார்.

தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி. கணேசன் பேசும் போது, ‘‘இந்த திறன் போட்டிகள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. சென்றஆண்டு ஜூன் மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 23 தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 90-க்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1.4 லட்சம் மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பு அல்லது தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறோம்’’என்றார்.

இதற்கிடையே, மாணவர்களின் கண்டுபிடிப்புகளை தமிழகம் முழுவதும் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல ஏதுவாக நடமாடும் வாகன ஊர்தியை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கிவைத்து, தமிழ்நாடு திறன் போட்டிகளின் இலட்சினையையும் அறிமுகம் செய்தார். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் பிரான்சில் நடைபெறவுள்ள உலகத்திறன் போட்டிகளில் பங்கேற்க வழிசெய்யப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT