ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மண் அள்ளி வந்த டிராக்டரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மீது டிராக்டரை ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் இன்று காலை 5-க்கும் மேற்பட்ட மண் அள்ளும் இயந்திரம் மூலம் 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண் அள்ளப்பட்டு வந்தது. இதையடுத்து பெரியகுளம் கண்மாயில் அனுமதி இன்றி மண் அள்ளுவதாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் மண் அள்ளுபவர்களுக்கும், இன்பத்தமிழன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் இன்பத்தமிழன் தரப்பினரை கண்மாயில் இருந்து வெளியேற்றினர்.
இதையடுத்து மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து இன்பத்தமிழன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மண் அள்ளிக் கொண்டு சென்ற டிராக்டரை மறித்தபோது, இன்பத்தமிழன் மீது டிராக்டரை ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.