கலந்தாய்வு | கோப்புப் படம் 
தமிழகம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ல் தொடக்கம்: உயர்கல்வித் துறை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும்தனியார் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளில் (அரசு ஒதுக்கீடு இடங்கள்) முதலாமாண்டு சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக ஜூன் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்‌.

இணைய வசதியில்லாதவர்கள் தங்கள் மாவட்டங்களில்‌ அமைக்கப்பட்டுள்ள இ சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி பிரிவினர் ரூ.500-ம்,எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.250-ம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். இணைய வசதியற்றவர்கள் வரைவோலை மூலமாக பதிவுக் கட்டணத்தை செலுத்தலாம்.

மாணவர்கள்‌ விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ் சரிபார்ப்புக்கான சேவை மையத்தை தேர்வு செய்துவிட வேண்டும்‌. அதேநேரம் விளையாட்டு வீரர்களுக்கான அசல்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு சென்னையில்‌ மட்டும் நேரடியாக நடைபெறும்‌.

இந்நிலையில், பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான கலந்தாய்வை வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி அக்டோபர் 3-ம் தேதிக்கு முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரேண்டம் எண் ஜூன் 7-ம் தேதி வெளியிடப்பட்டு. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். ஜூலை 12-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இதனைத் தொடர்ந்து, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2 முதல் 5-ம் தேதி வரையும், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. துணை கலந்தாய்வு செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 29-ம் தேதி வரையும், எஸ்சிஏ மற்றும் எஸ்சி பிரிவுக்கான கலந்தாய்வு அக்டோபர் 1 முதல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT