தமிழகம்

எங்களுக்கு உடன்பாடில்லாத அரசின் திட்டங்களை ஆதரிக்க மாட்டோம்: கே.எஸ்.அழகிரி

செய்திப்பிரிவு

மதுரை/பரமக்குடி: எங்களுக்கு உடன்பாடில்லாத அரசின் திட்டங்களை ஆதரிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

மதுரை மற்றும் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மக்களிடையே செல்வாக்கை அதிகரித்துள்ளது. மோடியின் ஆட்சி விளம்பரத்துக்கான ஆட்சி.

ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி செயல்பட வேண்டும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வாறு செயல்படவில்லை. திராவிடக் கொள்கைகள் இறந்துவி ட்டன என்பது போன்ற கருத்து களை தெரிவிக்க ஆளுநர் என்ற முறையில் ஆர்.என்.ரவிக்கு உரிமை இல்லை.

ஆளுநர் என்பவர் வெளிப்படையாக மாநில ஆட்சியை விமர்சிக்கக் கூடாது. மு.க.ஸ்டாலினும், முன்னாள் முதல்வர் பழனிசாமியைப் போல் இருக்க வேண்டும் என ஆளுநர் விரும்புகிறார். ஸ்டாலின், பழனிசாமியைப்போல் இல்லாதது அவருக்கு வருத்தத்தை அளிக்கிறது. எங்கள் கூட்டணிக்குள் சண்டை வந்து நாங்கள் பிரிந்தால் நன்றாக இருக்கும் என சிலர் ஆசைப்படுகின்றனர்.

அரசு செயல்படுத்தும் திட்டங்களில் எங்களுக்கு உடன்பாடில்லாத எதையும் நாங்கள் ஆதரிப்பதில்லை. 12 மணி நேர வேலை மசோதாவை உடனே எதிர்த்தோம். முதல்வர் அந்த சோதாவை திரும்பப் பெற்றதை வரவேற்கிறோம். தமிழர்கள் முன்னேற மதுக்கடைகளை மூட வேண்டும். மது விற்பனையை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணி வைக்கும் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது. திமுக கூட்டணி வலுவாக உள்ளது. எங்களது வாக்கு வங்கி பலமாக உள்ளது என்றார்.

SCROLL FOR NEXT