மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலைப் பயிற்சி வழங்கும் திட்டத்தை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மாணவிகள் தங்களை தற்காத்துக் கொள்ள தற்காப்பு கலை பயிற்சி அவசியமாகிறது.
இதற்காக ‘வஜ்ரா’ அமைப்பின் மூலம் சென்னைப் பள்ளி மாணவிகளுக்கு ‘க்ரவ்மகா’ என்ற தற்காப்புப் பயிற்சி அளிக்கப்படு கிறது. திருவான்மியூரில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்பை செவ்வாய்க்கிழமை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். 8 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு வாரம் ஒருமுறை பள்ளி நேரத்திலேயே இந்தப் பயிற்சி அளிக்கப்படும். அடுத்தகட்டமாக நுங்கம்பாக்கம் மற்றும் அண்ணா நகரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிற்சி தொடங்கப்படும்.
இதுகுறித்து ‘வஜ்ரா’ அமைப்பின் நிறுவனர் பூஜா மல்ஹோத்ரா கூறியதாவது:
பெண்கள் எங்கிருந்தாலும் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் எங்கள் அமைப்பின் நோக்கம். மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாகவே இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதுதவிர மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை பாலின விழிப்புணர்வு (gender sensitisation) வகுப்புகள் நடத்தப்படும். பெண்களை சக மனிதராக மதிப்பதற்கு சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும்.
இவ்வாறு பூஜா மல்ஹோத்ரா கூறினார்.
பயிற்சியாளர் ஸ்ரீராம் கூறும்போது, ‘‘மற்ற தற்காப்பு கலைகளைவிட ‘க்ரவ்மகா’ பயிற்சியில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. இது சண்டை போடுவதற்கான பயிற்சி அல்ல.
சாதாரண உடல்வாகு கொண்டவர்கள், தன்னைவிட பலமானவர்கள் தன்னை தாக்கும்போது உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுத் தருவதே ‘க்ரவ்மகா’. கண், மூட்டு உள்ளிட்ட ஒரு சில உறுப்புகளில் அனைவருக்கும் ஒரே பலம்தான் இருக்கும். ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுக்கும் ஆணை எந்த இடத்தில் தாக்கினால், அவன் பலவீனமடைவான் என்பதை தெரிந்துகொண்டால், அவனைத் தாக்கிவிட்டு, அவன் எழுவதற்குள் அந்த இடத்திலிருந்து பெண்கள் தப்பி ஓடிவிடலாம். ஒல்லியான, வலிமையற்றவர்கள்கூட குறுகிய காலத்தில் இந்தப் பயிற்சியை எளிதில் கற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.