அண்ணாமலை | கோப்புப்படம் 
தமிழகம்

கோயில் நிதியில் வாகனங்கள் வாங்குவது விதிமீறல்: அமைச்சர் சேகர்பாபு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: "திமுக அரசின் விதிமீறல்களை எதிர்த்தே, அரசின் பிடியிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வலியுறுத்தி வருகிறோம்" என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, கோயில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல், கோயில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது விதி மீறலாகும்.

கோயில் நிதியை அறநிலையத் துறையின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றமே கூறியிருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கோயில் நிதியில் வாகனங்கள் வாங்கியிருக்கிறோம் என்று அந்த விதிமீறலை நியாயப்படுத்தியிருக்கிறார்.

அமைச்சரின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசின் இத்தகைய விதிமீறல்களை எதிர்த்தே, அரசின் பிடியிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வலியுறுத்தி வருகிறோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT