மதுரை: மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் முன்பாக எம்பி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு திறப்பு விழா, மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியில், மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, தல்லாகுளம் பெருமாள் கோயில் முன்புறம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
எம்எல்ஏ கோ. தளபதி, மு.பூமி நாதன், துணை மேயர் டி.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சு.வெங்கடேசன் எம்பி மக்கள் பயன்பாட்டுக்காக உயர் கோபுர மின்விளக்கை திறந்து வைத்தார். சித்திரைத் திருவிழாவையொட்டி தல்லாகுளம் பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு பயன்பாட்டுக்கு வந்துள்ளதை பக்தர்கள் வரவேற்றனர்.