சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நேற்று இடிந்து விழுந்தது. படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

பெரம்பூரில் பழமையான கட்டிடம் இடிந்து விபத்து: வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பழமையான கட்டிடம் நேற்று இடிந்து விழுந்தது. சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 100 ஆண்டுக்கும் மேலான பழமைவாய்ந்த 2 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இருந்துவந்தது. பழமையான இக்கட்டிடம் வலுவற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்து மாநகராட்சி தரப்பில் சமீபத்தில் கட்டிடத்தை இடிக்குமாறு வீட்டின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பே, இக்குடியிருப்பில் இருந்தவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டனர்.

பின்னர், கட்டிடத்தை சுற்றிலும்மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்திருந்தது. இந்நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக இக்கட்டிடம் நேற்று காலைதிடீரென இடிந்து விழுந்தது. ஏற்கெனவே கட்டிடத்தை சுற்றிதடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்ததால் சாலையில் சென்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல கட்டிடத்தின் உள்ளேயும் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எழும்பூர், வேப்பேரி மற்றும் எஸ்பிளனேடு தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சாலையோரம் கிடந்த கட்டிடத்தின் இடிபாடுகளைஉடனடியாக அகற்றினர். மேலும்யாரும் கட்டிடத்தை நெருங்காதவாறு கூடுதலாக பாதுகாப்பு தடுப்புகளையும் அமைத்தனர்.

இந்த விபத்து காரணமாக பட்டாளம்-பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் சிறிது நேரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக ஓட்டேரிபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT