சென்னை: தொழிற்சாலை உள்ளிட்ட உயரழுத்த பிரிவு நுகர்வோருக்கு பசுமை மின்சாரத்தை விற்பனை செய்ய அனுமதி கிடைத்திருப்பதால், மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மின்வாரியம் குறைந்த அழுத்தப் பிரிவில் வீடுகளுக்கும், உயரழுத்த பிரிவில்தொழிற்சாலைகள், ஜவுளி ஆலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கும் மின்விநியோகம் செய்து வருகிறது.
தொழிற்சாலைகள், ஜவுளி ஆலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஆகியவற்றுக்கு ஒரு யூனிட் மின்கட்டணம் ரூ.6.75-க்கும், ரயில்வே, கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் ரூ.7-ம், வணிக பிரிவுக்கு ரூ.8.50-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்துடன் 10 சதவீதம் கூடுதலாக சேர்த்து பசுமை மின்கட்டணம் வசூலிக்கப்படும்.
பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் 3,500 மெகாவாட் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த மின்சாரத்தில் இருந்துதான் பசுமை மின்சாரம் விற்கப்படும். இவ்வாறு பசுமை மின்சாரத்தை விற்பனை செய்ய மின்வாரியத்துக்கு, தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து, தற்போது, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகியவிமான நிலையங்களுக்கு பசுமை மின்சாரம் விநியோகிக்குமாறு விமான நிலையங்களின் ஆணையமும், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுவரும் டாடா கன்சல்டன்சி நிறுவனமும் பசுமை மின்சாரம் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
இதன் மூலம், பசுமை மின்சாரம் விற்பனையால் மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய்கிடைக்கும் என மின்வாரியஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.