தமிழகம்

வடசென்னையில் தலா ரூ.5 கோடியில் 5 பேருந்து நிலையங்கள் சீரமைப்பு: தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, வடசென்னையில் 5 பேருந்து நிலையங்களை தலாரூ.5 கோடியில் தரம் உயர்த்துவதற்கான வடிவமைப்பு, வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வுசெய்தார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் சார்பில் சட்டப்பேரவையில் அமைச்சர் பி.சே.சேகர்பாபு, மாநகர பேருந்து நிலையங்களை தலா ரூ.5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையங்களாக மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து, மேம்படுத்தப்பட உள்ள 5 பேருந்து நிலையங்களை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்த நிதியாண்டுக்கான சிஎம்டிஏ தொடர்பான 50 அறிவிப்புகளில், சென்னை பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டுக்கான 34 அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், 6 மாநகர பேருந்து நிலையங்களை தரம் உயர்த்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம், பெரியார் நகர் பேருந்து நிலையம், திருவிக நகர் பேருந்து நிலையம், முல்லை நகர் பேருந்து நிலையம் மற்றும் கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 மாநகர பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல், இயக்கப்படுகின்ற பேருந்துகள் முறையாகவும், சீராகவும் செல்வதற்கான வழிவகை செய்வது, பணிமனையில் நிர்வாக அலுவலகம் அமைப்பது, பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்வறைகளை மேம்படுத்துவது, பேருந்து நிலையத்துக்கு வரும் பயனாளிக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது, நவீனகழிப்பிட வசதிகளை உருவாக்குவது போன்ற பல்வேறு பணிகளுக்காக ஒவ்வொரு பேருந்து நிலையத்துக்கும் தலா ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது.

நவீன வசதிகளுடன்.. இவற்றை நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையமாக மேம்படுத்துவது குறித்து ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. கூடுதல் நிதிதேவைப்பட்டால் ஒதுக்கப்படும். முடிந்த அளவில் ஒதுக்கப்பட்ட நிதியில் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, துறையின் செயலர் அபூர்வா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டார் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT