மதுரை: சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தை முன்னிட்டு, அழகர்கோயிலில் இருந்து அழகர் இன்று (மே 3) மாலை மதுரை நோக்கி புறப்படுகிறார். இதற்காக, நகரில் போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்து போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, அழகர்கோவில் நோக்கி கடச்சனேந்தல், அப்பன் திருப்பதி வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் இன்றுபிற்பகல் 3.30 மணிக்கு மேல் மதுரை-அழகர்கோயில் சாலையில் தற்காலிகமாக நிறுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், கேரளா நீட் அகாடமி - நான்கு சக்கர வாகனங்கள். மாங்காய் தோட்டம் - டாடா ஏஸ் மற்றும் சிறிய ரக சரக்கு வாகனங்கள். பொய்கைகரைப்பட்டி தெப்பம் - இரு சக்கர வாகனங்கள், பயணிகள் பேருந்துகள் வந்து செல்லலாம்.
மதுரையில் இருந்து அழகர்கோயிலுக்கு செல்லும் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளும் பிற்பகல் 3.30 மணி வரை அழகர்கோயில் வளாகத்துக்குள் வந்து செல்லலாம். அதன்பின்னர், மதுரையில் இருந்து அழகர்கோயில் மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள், மதுரை - அழகர்கோவில் சாலையில் கடச்சனேந்தல் வரை வந்து, இடது புறம் திரும்பி ஊமச்சி குளம், சத்திரப்பட்டி வழியாக பொய்கைகரைப்பட்டி தெப்பம் செல்ல வேண்டும்.
அங்குள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட வேண்டும். மீண்டும் சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல் வழியாக மதுரை நகருக்குள் செல்ல வேண்டும். மேலூரில் இருந்து அழகர்கோவில் நோக்கிச் செல்லும் வாகனங்கள், பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மேலூர் - அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தலாம்.
அதன்படி, அம்மன் மகால் அருகே - இரு சக்கர வாகனங்கள். பிரகாஷ் அய்யர் கார்டன் (மகாத்மா மாண்டிசோரி பள்ளி சந்திப்பு) - இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். முத்துலட்சுமி ரைஸ்மில் பார்க்கிங் - இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். ஐஸ்வர்யா கார்டன் - நான்கு சக்கர வாகனம் மற்றும் பயணிகள் பேருந்துகள் வந்து செல்லலாம். நாகம்மாள் கோயில் அருகே - நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
மேலூர் - அழகர்கோவிலுக்கு செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் பிற்பகல் 3.30 மணி வரை அழகர்கோயில் வளாகம் வரை வந்து செல்லலாம். பிற்பகல் 3.30 மணிக்கு மேல் அழகர் கோவிலுக்கு வாகனங்களில் வருவோர் தேரோடும் வீதிகளில் வாகனங் களை நிறுத்த அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களை தேரோடும் வீதியின் மேற்கிலுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும். விஐபி, விவிஐபி கார்கள் மட்டும் தெப்பத்தின் கீழ் புறமுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
பேருந்து, வேன், சரக்கு வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் தேரோடும் வீதியை தவிர்த்து, தேரோடும் வீதியின் கிழக்கு பகுதியிலுள்ள அந்தந்த வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும். அரசுத் துறை வாகனங்கள் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள சுந்தரராச பெருமாள் கோயில் உயர்நிலைப் பள்ளி வளாக வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
மதுரைக்கு சுவாமி புறப்பட்டு, சத்திரப்பட்டி சந்திப்பை கடக்கும் வரையிலும் கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை எடுக்கக்கூடாது. தற்காலிக வாகன நிறுத்துமிடங்களை தவிர, அழகர்கோவிலில் இருந்து கடச்சனேந்தல் சந்திப்பு வரை சாலையின் இருபுறமும் எக்காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்தக்கூடாது என, போக்குவரத்து காவல் துறை யினர் அறிவித்துள்ளனர்.