தமிழகம்

மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா நிறைவு: ஒரே நாளில் 1 லட்சம் பேர் நீராடினர்

செய்திப்பிரிவு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த காவிரி மகா புஷ்கரம் விழா நேற்றுடன் நிறைவுபெற்றது. நிறைவு நாளான நேற்று விடுமுறை என்பதால், ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்.

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடையும்போது, குறிப்பிட்ட ராசிக்கு உரிய நதியில் புஷ்கரம் விழா நடைபெறும். 12 ராசிகளையும் 12 முறை குருபகவான் கடக்கும்போது அது மகா புஷ்கரம் விழாவாக கருதப்படும். அவ்வகையில் துலாம் ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு, அந்த ராசிக்குரிய காவிரியாற்றில் மகா புஷ்கரம் விழா தொடங்கியது.

மகா புஷ்கரம் விழாவையொட்டி, மயிலாடுதுறையில் கடந்த 11-ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காப்புக் கட்டிக் கொண்டனர். விழா நேற்று நிறைவடைந்ததையொட்டி, காவிரித் தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெண்களின் காப்பு அவிழ்க்கப்பட்டது.

காவிரிக் கரையில் உள்ள கோயில்கள் மற்றும் மாயூரநாதர் கோயிலில் இருந்து அஸ்திரதேவர் காவிரிக்கு எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெற்றது.

காவிரியின் வட கரையில் நடைபெற்று வந்த ஹோமங்கள் நேற்று பூர்த்தியடைந்தன. இதேபோன்று, தென் கரையில் நடைபெற்று வந்த தேவாரம், திருவாசகம் முற்றோதல், ஆன்மிக சொற்பொழிவுகள் நேற்றுடன் நிறைவடைந்தன.

மாலையில் விமலானந்தா திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுவாமி ராமானந்த மகரிஷி உள்ளிட்ட விழாக்குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நேற்று இரவு 7 மணியளவில் கொடியிறக்கம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, காவிரி அம்மனுக்கு விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதில், வேத விற்பன்னர்கள், சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT