கோவை: தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை வெளியுலகுக்கு உணர்த்தும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ - ‘இந்துஸ்தான்’ நாளிதழ்கள் இணைந்து ‘வந்தார்க்கும் வாழ்வு உண்டு’ எனும் புலம்பெயர் தொழிலாளர்களின் இருப்பும், பாதுகாப்பும் குறித்த பகிர்வரங்கை திருப்பூரில் நேற்றுமுன்தினம் நடத்தின.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் பேசியதாவது: தமிழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளதோ, அதே உரிமை வெளி மாநிலத்தில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் உள்ளது.
இங்கு வரும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு ஆகியவற்றை ஒப்பந்ததாரரோ, சம்மந்தப்பட்ட நிறுவனமோ ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கூலியை வழங்க வேண்டும். வார இறுதி நாட்களில் தொழிலாளர்களிடம் உள்ள விளையாட்டு, கலைத் திறன்களை வெளிக்கொண்டு வர தேவையான வசதியை அரசும், தொழில்நிறுவனங்களும் ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்துஸ்தான் நாளிதழ் நிர்வாக ஆசிரியர் (பிஹார், ஜார்க்கண்ட்) திர்விஜய் சிங் காணொலி வாயிலாக பேசியது: வெளி மாநிலங்களில் இருந்து பணிபுரிய வரும் தொழிலாளர்களை தமிழக அரசும், நிர்வாகமும் நன்கு கவனித்துக்கொள்கின்றன. நீங்கள் ஏதேனும் விரும்பத்தகாத சம்பவத்தை கண்டால், அதை நம்புவதற்கு முன், அரசின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். எந்தவொரு வீடியோ அல்லது செய்தியையும் அனுப்பும் முன் உண்மையை அறிந்து கொள்ளுங்கள். வதந்திகளைப் பரப்புவதில் எந்த சுயநல பேர்வழிகளும் வெற்றிபெறக்கூடாது.
திருப்பூர் சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன்: திருப்பூரில் 1.25 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது மாநிலத்திலேயே அதிகம் ஆகும். இவ்வாறு தொழிலாளர்களின் விவரங்கள் கைவசம் இருந்தால், இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்களை நாங்கள் எளிதாக அணுக முடியும். தொழிலாளர்கள் தங்கள் புகார்களை 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு சரகம்) அபிஷேக் குப்தா: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் மிகவும் அமைதியாக உள்ளது. திருப்பூரில் நடைபெற்றதாக பரப்பிய வீடியோ போலியானது. இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்கள். உங்களுக்கு பிரச்சினைகள் அல்லது புகார்கள் ஏதேனும் இருப்பின் 94981 03100, 94981 74974 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் மற்றும் கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி: வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான சட்ட உதவிகளை இலவசமாக பெற மாவட்ட சட்டப் பணிகள் குழுவை அணுகலாம்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆர்.கே.சிவசுப்பிரமணியம்: திருப்பூரில் 21 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நிறுவனங்களிலும் இஎஸ்ஐ, பி.எஃப் வழங்குவதன் மூலம் அவர்களின் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படுகிறது.
‘இந்து தமிழ் திசை’ விற்பனை பிரிவு பொதுமேலாளர் டி.ராஜ்குமார்: வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பளிப்பதில் நீதித்துறையும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் எப்போதும் தயாராக உள்ளன என்பதை உணர்த்தும் விதமாகவே இந்நிகழ்ச்சிஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர் களிடையே நிலவி வரும் அச்சத்தை போக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம், என்றார்.