அமமுகவின் அம்மா தொழிற்சங்க பேரவை சார்பில் சென்னை எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆப்பிள் மாலை அணிவித்து கவுரவிக்கும் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கே.விதுபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள். உடன் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன் உள்ளிட்டோர். 
தமிழகம்

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதில் அமமுகவின் பங்கு முதன்மையாக இருக்கும்: டிடிவி தினகரன் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதில் அமமுகவின் பங்கு முதன்மையானதாக இருக்கும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுகவின் அம்மா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின பொதுக்கூட்டம் சென்னை எம்ஜிஆர் நகரில் நேற்று நடைபெற்றது. இதில்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன் தொடக்க உரையாற்றினார். பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று, ஏழை எளிய மகளிருக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

தொழிலாளர்கள் போராடி பெற்ற 8 மணி நேர வேலை உரிமையை இந்தியாவில் செயல்படுத்தி 100 ஆண்டு நிறைவடையும் வேளையில், 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக அரசு கொண்டு வருகிறது.

ஏற்கெனவே தமிழக இளைஞர்கள் மது கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டு, மதுக்கடைகளை மூட வேண்டும் என்றுஅனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்துவரும் வேளையில், தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது கிடைக்கும் என்று அறிவிக்கின்றனர். திருமண மண்டபங்களில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறிக் கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டு, அதை திரும்பப் பெறுகின்றனர்.

இதற்காகத்தான் இவர்களை 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வர விடாமல் ஜெயலலிதா தடுத்து வைத்தார். இந்த ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் காலம் வெகுதொலைவில் இல்லை. அதில் அமமுகவின் பங்கு முதன்மையானதாக இருக்கும்.

ஜெயலலிதா ஆட்சி: பழனிசாமியும், அவரைச் சேர்ந்த ஒருசிலரும் செய்யும் குளறுபடிகள். சுயநலத்தால், பணத்திமிரால் ஸ்டாலின் இப்படி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

இரட்டை இலை தற்காலிகமாக கிடைத்ததால் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றிவிடலாம் என்று பழனிசாமி உள்ளிட்டோர் நினைக்கிறார்கள். இவர்களால் யாரோஒரு சிலரை விலை கொடுத்துவாங்கிவிட முடியுமே தவிர, தினகரனுடன் நிற்பவர்கள், ஜெயலலிதாவின் லட்சோபலட்சம் தொண்டர்களை எத்தனை கோடி கொடுத்தாலும் உங்களால் வாங்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவரும் வரை ஓயமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர்கள் ம.கரிகாலன், மொளச்சூர் இரா.பெருமாள், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, அம்மா தொழிற்சங்க பேரவைதலைவர் நெல்லை ஏ.பரமசிவம், செயலாளர் கே.செல்லப்பாண்டி, தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கே.விதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT