‘மிஸ் கூவாகம் - 2023’ நிகழ்வில் பங்கேற்க விழுப்புரத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் திருநங்கைகள். படங்கள்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

விளையாட்டுத் துறையில் திருநங்கைகளுக்காக புதிய திட்டம் - ‘மிஸ் கூவாகம் 2023’ நிகழ்வில் அமைச்சர் உதயநிதி உறுதி

செய்திப்பிரிவு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் கூத் தாண்டவருக்கு தாலி கட்டும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.

இதையொட்டி, நேற்று முன்தினம் சென்னை திருநங்கை நாயக்குகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டி நடை பெற்றது.

தொடர்ந்து நேற்று மாலை தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு இயல், இசை,நாடக மன்றம் சார்பில், ‘மிஸ் கூவாகம் - 2023’ நிகழ்ச்சி நடை பெற்றது.

நடந்த இப்போட்டியில் புதுச்சேரி உட்பட 42 மாவட்டங்களில் இருந்து 66 திருநங்கைகள் பங்கேற்றனர். இதில் 16 பேர் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தநிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பா ளராக பங்கேற்ற கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் 16 திருநங்கைகளுக்கு அரசின் இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ‘மிஸ் கூவாகம் - 2023’ அழகிப் போட்டி யின் இறுதிச்சுற்று விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று மாலை நடந்தது. அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் மதிவேந் தன், உதயநிதி ஸ்டாலின், ஆட்சி யர் பழனி, கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் இது போன்று அமைச் சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் வரவில்லை. இன்று நாங்கள் வந்துள்ளோம். திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரே இயக்கம் திமுகதான்.

மழைக்கு நடுவே தார்பாயை பிடித்துக் கொண்டு நிகழ்வை பார்வையிடும் திருநங்கைகள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி திருநங்கைகளுக்கான பல திட்டங்களை செயல்படுத்தினார். ‘திருநங்கைகள்’ என்று பெயர் வைத்து அவர்களுக்கு சமூகத்தில் மரியாதையை ஏற்படுத்தினார். 2008-ல் திருநங்கைகள் நல வாரியம் அமைத்தது திமுக ஆட்சியில்தான். கடந்த அதிமுக ஆட்சியில் அந்த நல வாரியம் முடங்கி விட்டது. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இதனை மீண்டும் புதுப்பித்து, செயல்படுத்தி வருகிறது.

திருநங்கைகளுக்கான பல திட் டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனது சேப்பாக்கம் தொகுதியில் திருநங்கைகளுக்கு முக்கியத்து வம் கொடுக்கப்பட்டு, சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி பலர் பயனடைந்துள்ளனர். சட்டமன்றத்தில் எனது முதல் கன்னிப் பேச்சில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்தேன்.

அதைத் தொடர்ந்து அவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000-லிருந்து, ரூ.1,500 ஆக உயர்த்தி தரப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம்பலரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

திருநங்கைகளின் விளையாட்டு திறமையை வெளிக் கொண்டு வரும் விதமாக விரைவில் அவர்களுக்கான திட்டம் கொண்டு வர பரிசீலனை செய்யப்படும். திருநங்கைகள் குறைகளைத் தெரிவிக்க 24 மணி நேரமும் எனது அலுவலகம் காத்திருக்கிறது. வருங்காலத்தில் திமுக மூலம் எம்எல்ஏ, எம்பிகளாகவும் திருநங்கைகள் வருவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை” என்றார்.

பலத்த மழை பெய்ததால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இன்று முற்பகல் ‘மிஸ்கூவாகம் - 2023’ போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT