திருச்சி மாவட்டம் கிளியூர் அருகே கல்லணைக் கால்வாயில் அமைக்கப்பட்டு ஓராண்டுக்குள்ளாகவே சேதமடைந்துள்ள கான்கிரீட் தளம். 
தமிழகம்

பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு ஓராண்டிலேயே கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் உடைந்து சேதம்

கல்யாணசுந்தரம்

திருச்சி: திருச்சி மாவட்டம் கிளியூர் அருகே கல்லணைக் கால்வாயில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் ஓராண்டிலேயே உடைந்து சேதமடைந்துவிட்டதாகவும், பணிகள் தரமின்றி மேற்கொள்ளப்பட்டது தான் இதற்கு காரணம் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து பிரியும் கல்லணைக் கால்வாய் ஏறத்தாழ 148 கி.மீ தொலைவுக்கு முதன்மை வழித்தடமாகவும், 636 கி.மீ தொலைவுக்கு கிளை வாய்க்கால்களுடன் புதுக்கோட்டை மாவட்டம் வரையும் செல்கிறது. இதன் மூலம் கால்வாயின் இருபுறங்களிலும் உள்ள ஏறத்தாழ 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இந்த கால்வாயில் தண்ணீர் கடைமடை வரை செல்ல ஏதுவாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் ரூ.2,639.15 கோடி மதிப்பில் கரைகள் மற்றும் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை 2021 பிப்ரவரி 2-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின், கால்வாயில் தண்ணீர் செல்லாத காலங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், திருச்சி மாவட்டம் கிளியூர் அருகே கல்லணைக் கால்வாயில் சுமார் 4 கி.மீ தொலைவுக்கு கடந்த ஆண்டில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளம் பல இடங்களில் உடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதற்கு, பல கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணி முறையாகவும், தரமாகவும் மேற்கொள்ளப்படாததே காரணம் என இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மூத்த நிர்வாகி கிளியூர் தா.சங்கிலிமுத்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கடந்த ஆண்டு கிளியூர் பகுதியில் சுமார் 4 கி.மீ தொலைவுக்கு கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது கரையின் இருபுறங்களிலும் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காக கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தின் மீது ரெடிமேட் கான்கிரீட் கலவை லாரிகள் மற்றும் மண் எடுக்கச் செல்லும் லாரிகள் சென்று வருவதால் அந்த பாரம் தாங்காமல் தரையில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளம் பல இடங்களில் உடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கம்பிகள் கட்டப்படாமல் வெறும் மண், சிமென்ட், ஜல்லி கொண்டு 2 அங்குல உயரத்துக்கு மட்டுமே இந்த கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை. நீர்வளத் துறை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பு செய்வதில்லை. இது தொடர்பாக அரசு ஒரு குழுவை அமைத்து, பணிகளை கண்காணித்து, தவறு செய்த ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து நீர்வளத் துறை பொறியாளர்களிடம் கேட்ட போது, ‘‘கால்வாயின் தரைப்பகுதியில் கம்பி இல்லாமல் தான் 4 அங்குலம் அளவுக்கு கான்கிரீட் போடப்படுகிறது. கடந்த இரு நாட்களாக பெய்த மழை காரணமாக கிளியூர் பகுதியில் லாரி சென்றபோது பாரம் தாங்காமல் ஒரு சில இடங்களில் தரைத்தள கான்கிரீட் உடைந்து சேதமடைந்துள்ளது. அதனால், இனி லாரியை அதில் இயக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

இரு நாட்களாக பெய்த மழையால், கல்லணைக் கால்வாயில் லாரி சென்றபோது பாரம் தாங்காமல் கான்கிரீட் தளம் சேதமடைந்தது.

SCROLL FOR NEXT