சென்னை: தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ள 1,107 பேருந்துகளில் 157 தாழ்தள பேருந்துகள் அவசியம் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் கூட்டமைப்பை சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ள 1,107 பேருந்துகளில் சக்கர நாற்காலியுடன் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஏறி, இறங்கச் சிரமப்படுவர். எனவே, அவற்றை தாழ்தளப் பேருந்துகளாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தினால், பொருளாதார ரீதியில் சாத்தியமில்லா சூழல் உருவாகும். எனவே, நடைமுறைச் சிக்கல்களை கருத்தில்கொண்டு மனுவில் குறிப்பிட்ட டெண்டரின்படி, 1,107 பேருந்துகளில் 950 பேருந்துகளை மட்டுமே 900 மி.மீ. உயரம் கொண்ட பேருந்துகளாக கொள்முதல் செய்ய வேண்டும்.
மீதமுள்ள 157 பேருந்துகளை தாழ்தளப் பேருந்துகளாகவே கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கான டெண்டர் அறிவிப்பை 2 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். அதிக அளவிலான மாற்றுத் திறனாளிகள் பயன் பெற வேண்டும் என்ற கருத்தை முதன்மையாகக் கொண்டு, எம்டிசி, ஐஆர்டி, போக்குவரத்து துறை, மாற்றுத் திறனாளிகள் அமைப்பு நிர்வாகி என 4 பேர் அடங்கிய குழுவினர், தாழ்தள பேருந்துகள் இயங்கும் வழித்தடம், நேரம் குறித்து முடிவு செய்ய வேண்டும். மெட்ரோ நகரங்களில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் வகையிலான பேருந்துகளின் வருகையை செல்போன் செயலி மூலம் அறிவிக்க வேண்டும்
தாழ்தளப் பேருந்துகள் எளிதாகப் பயணிக்கும் வகையில்,சாலை தரத்தை மேம்படுத்த வேண்டும். நடைமேடையில் இருந்து சக்கர நாற்காலி மூலம் நேரடியாக பேருந்துகளில் ஏறும் வகையில் பேருந்து நிறுத்தங்கள் அமைய வேண்டும். வரும் காலங்களில் நகர், புறநகர்ப் பகுதிகளில் தாழ்தளப் பேருந்துகளை மட்டுமே இயக்கும் வகையில், பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
இதுகுறித்து வாகன உற்பத்தியாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தமிழக அரசு கணிசமான அளவில் தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நல்ல தொடக்கத்தை முன்னெடுத்துள்ளது. இதை ஊக்குவிப்பது அவசியம். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.