பொன்னேரி: மீஞ்சூரில் திருமண நிகழ்வில் ரசம் வைத்திருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சதீஷ் (20). இவர், சென்னை- கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் பகுதி நேர வேலையாக திருமண மண்டபங்களில் நடைபெறும் விழாக்களில் உணவு பரிமாறும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்படி கடந்த ஏப்ரல் 23-ம் தேதி மீஞ்சூரில் திருமண நிகழ்வு ஒன்றில் உணவு பரிமாறும் பணிக்குச் சென்றார்.
அங்கு சமையலறையில் உணவு பாத்திரத்தை தூக்கும்போது, பின் பக்கத்தில் இருந்த கொதிக்கும் ரசம் இருந்த பாத்திரத்தில் சதீஷ் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த சதீஷ், சக தொழிலாளர்களால் மீட்கப்பட்டு, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.