திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோயில் சங்கராபரணி ஆற்றங்கரையில் நடந்த கங்கா ஆரத்தி நிகழ்வில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு தரிசனம் செய்தார். 
தமிழகம்

ரஜினிக்கு தெலுங்கு மாநில அரசியல் பற்றி எதுவும் தெரியவில்லை புதுவையில் அமைச்சர் ரோஜா கிண்டல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோயில் சங்கராபரணி ஆற்றில் ஆதி புஷ்கரணி விழா கடந்த 22-ம் தேதி தொடங்கி வரும் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா நேற்று மாலை திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்வில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார், சந்திரபிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்.டி ராமராவை எல்லோரும் கடவுளாக பார்க்கிறார்கள். அவரது மரணத்திற்கு காரணம் யார் என்பது ரஜினிக்கு தெரியும். விண்ணுலகில் இருந்து சந்திரபாபு நாயுடு மீது என் டி ராமராவ் ஆசிகளை பொழிகிறார் என்று பேசியதை பார்த்து தெலுங்கு மாநிலத்தில் அனைவரும் கோபத்தோடு இருக்கின்றனர். தெலுங்கு மாநில அரசியல் குறித்து எதுவும் தெரியாமல் பேசக்கூடாது.

ரஜினி அரசியலில் இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் அரசியலுக்கு வரப்போவதில்லை. அவர் இவ்வளவு நாட்களாக வாங்கிய நல்ல பெயர் அனைத்தும் சரிந்து வருகிறது. அதனை தெரிந்து கொண்டு அறிக்கை ஒன்றை அளித்தால் அவருக்கு நல்லது.ரஜினியை பெரிய அளவில் பார்த்தோம். ஆனால் இன்று அவர் ஜீரோவாக ஆகிவிட்டார். ஜெகன் மோகன் ரெட்டி போன்ற முதல்வரை எங்கும் பார்க்க முடியாது.

ஜெகன் மோகன் ரெட்டியை தோற்கடிக்க சந்திர பாபு நாயுடு முதலில் பவன் கல்யாணை பயன்படுத்தினார். அவரால் ஒன்றும் முடியவில்லை. இப்போது ரஜினியை இழுக்க பார்க்கிறார். அதனை ரஜினி தெரிந்து கொண்டால் நல்லது. யார் சேர்ந்து வந்தாலும், ஜெகன்மோகன் ரெட்டியை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT