பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம்: 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டலமும் விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், தமிழக அரசு சார்பில் 2.23 ஏக்கர் பரப்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கருணாநிதியின் இலக்கியப் பணிகளைப் போற்றும் வகையில் மெரினா கடலில் அவருக்கு ரூ.81 கோடி செலவில், 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்துக்குப் பின்பகுதியில் நுழைவுவாயில் அமைத்து,கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் தொலைவுக்கு கண்ணாடியிலான மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நினைவுச் சின்னத்துக்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் முதல்கட்ட ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டது.

தமிழக அரசின் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைக் கேட்குமாறு அறிவுறுத்தியது.

அதன்படி, கடந்த ஜனவரி 31-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த கருத்துகேட்புக் கூட்டத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 22 பேர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 12 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பின்னர், பேனா நினைவுச் சின்னம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த 17-ம் தேதி நடைபெற்ற மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆலோசனைக் கூட்டத்தில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக 12 நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

பேனா நினைவுச் சின்னம் அமைக்கத் திட்டமிட்டுள்ள பகுதியில் இருந்து 800 மீட்டர் தொலைவில் `ஐஎன்எஸ் அடையாறு' கடற்படைத் தளம் இருப்பதால், அவர்களிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும்.

கட்டுமானப் பணிகளுக்காக எந்தசூழ்நிலையிலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூடாது. ஆமை இனப்பெருக்கக் காலத்தில், நினைவுச் சின்னத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.

அனைத்து கட்டுமானப் பணிகளும்,கடலோர ஒழுங்குமுறை மண்டலம் வெளியிட்ட அறிவிக்கை 2011-ஐப் பின்பற்றி அமைக்கப்பட வேண்டும்.

தற்காலிக கட்டுமானங்கள், அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள், கடலில் இருந்து தோண்டி எடுக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கடற்கரையில் தேக்கி வைக்கக்கூடாது. ஒருவேளை தேக்கிவைக்க நேரிட்டாலும், பின்னர் முன்பு இருந்ததைப் போலவே சீரமைக்க வேண்டும்.

திட்ட நிபுணர் குழு, சட்டரீதியான சிக்கல் எதுவும் இல்லை என்று சான்றளிக்க வேண்டும். நீதிமன்றமோ அல்லது ஆணையமோ வழங்கும் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துமாறு ஆணையிடும் அதிகாரம் திட்ட நிபுணர் குழுவுக்கு உள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டலம் வழங்கும் தடையில்லாச் சான்று, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது.

தமிழ்நாடு கடலோர மேலாண்மை ஆணையத்தின் நிபந்தணைகள் அனைத்தையும் நிச்சயம் பின்பற்ற வேண்டும். இதைக் கண்காணிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும்.

திட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக, இது தொடர்பாக அனைத்துத் துறைகளிடமும் தடையில்லாச் சான்று பெறுவது அவசியம் உள்ளிட்ட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, விதிகள்மீறப்பட்டால் அனுமதி திரும்பப் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேனா நினைவு சின்னம் அமைக்கமத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்த நாளானவரும் ஜூன் 3-ம் தேதி, பேனா நினைவுச் சின்னத்துக்கு அடிக்கல்நாட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நினைவுச் சின்னம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டலமும் விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

இதற்கிடையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில்கொண்டு, நினைவுச் சின்னம் அமைக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தையும் தமிழக அரசு முறையாகப் பின்பற்றி, பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT