சென்னை: திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரத்தில் காவல் உதவி கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். இவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நோட்டீஸை அனுப்பியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: அம்பா சமுத்திரத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த மாதம் 23-ம் தேதி விசாரணைக்காக சுபாஷ் என்பவர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு, இடிக்கியை கொண்டு அவரது பல்லை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியுள்ளார்.
மேலும் அங்கு சிந்திய ரத்தத்தையும் அவரையே சுத்தம் செய்ய வைத்தார். இதுமட்டுமின்றி, வாகனத்தில் இருந்து விழுந்ததாலேயே பல் உடைந்ததாக சுபாஷிடம் எழுதியும் வாங்கிக் கொண்டார்’ என கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருப்பின் பாதிக்கப்பட்டவர் கடுமையான மனித உரிமை மீறலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக டிஜிபி 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.