தமிழகம்

கோடை வெயிலால் அதிக வெப்பம்... உடலில் நீர்சத்து குறையாமல் பாதுகாக்க வேண்டும்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை:

உடலில் நீர்சத்து குறையாமல் பாதுகாக்க பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும், முடிந்த வரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்,

வெளிர் நிறமுள்ள காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும், நண்பகல் நேரங்களில் வெளியில் செல்லும்போது கண்ணாடி மற்றும் குடை கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டுச்செல்ல வேண்டாம்.

இளநீர் போன்ற திரவங்களை கொடுங்கள், தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்கவேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு நிழல் தரும் கூரைக்கு அடியில் கட்டி வைக்க வேண்டும். அவசியமான போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT