தமிழகம்

காவிரி - குண்டாறு திட்டத்துக்காக புதுக்கோட்டையில் 500 பேரின் நிலங்களை கையகப்படுத்த திட்டம்

கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக 500 நில உரிமையாளர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, முதல்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டங்களில் இத்திட்டத்துக்கான நீர்வழித்தடத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 19 கிராமங்களில் 500 பேருக்கு சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.இந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, நிலங்களை கையகப்படுத்தி கால்வாய் வெட்டுவதற்கு வசதியாக மே மாதம் 4 தேதிகளில் சிறப்பு முகாம்நடத்தப்பட உள்ளது.

இது குறித்து காவிரி- குண்டாறு இணைப்புத் திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி கூறியது: காவிரி - குண்டாறு திட்டத்தில் கையகப்படுத்தப்பட உள்ள 500 பேரின் நிலங்களில், பல நிலங்கள் தற்போது அனுபவித்து வரும் நில உடைமையாளர்களின் பெயரில் இல்லை. மாறாக, கூட்டுப் பட்டாவாகவும், மூதாதையர்களின் பெயரில் உள்ள பட்டாவாகவும் உள்ளன.

இவற்றை சரிசெய்ய ஒவ்வொரு அலுவலரையும் தனித்தனியே சந்திப்பதற்கு காலதாமதமாகும். எனவே, இவற்றை விரைந்து ஒழுங்கு படுத்துவதற்காக வருவாய்த் துறை உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை உள்ளடக்கி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதன்படி, குன்னத்தூர் மற்றும் கரியமங்கலம் கிராமங்களுக்கு குன்னத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மே 2-ம் தேதியும்,

சிங்கத்தாகுறிச்சி, மாத்தூர், மண்டையூர், லட்சுமணப்பட்டி, செட்டிப்பட்டி, புலியூர், வாலியம்பட்டி மற்றும் மருதூர் ஆகிய கிராமங்களுக்கு கீரனூர் தேவிபாலா திருமண மண்டபத்தில் மே 5-ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதேபோல, மங்கதேவன்பட்டி, வாழமங்கலம், சீமானூர், வத்தனாகுறிச்சி, பூங்குடி, வெள்ளனூர் ஆகிய கிராமங்களுக்கு கீரனூர் தேவி பாலா திருமண மண்டபத்தில் மே 9-ம் தேதியும்,

செம்பாட்டூர், கவிநாடு மேற்கு, நத்தம்பண்ணை ஆகிய கிராமங்களுக்கு புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 17-ம் தேதியும் சிறப்பு முகாம்நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் நில ஆவணங்களில் பிரச்சினைகள் உள்ளோர் கலந்துகொண்டு சரிசெய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT