தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய மூத்த வேளாண் வல்லுநர் குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற வேளாண் உதவி இயக்குநருமான பி.கலைவாணன். 
தமிழகம்

டெல்டா பாசனத்துக்காக ஜூன் முதல் வாரத்தில் மேட்டூர் அணையை திறக்க வேண்டும்: வேளாண் வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரை

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஜூன் முதல் வாரத்தில் மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றவிவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த வேளாண் வல்லுநர் குழுவின் தலைவரும், வேளாண்மைத் துறை ஓய்வுபெற்ற உதவி இயக்குநருமான பி.கலைவாணன் பேசியது: காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஒவ்வோர் ஆண்டும் மூத்த வேளாண்வல்லுநர்கள் குழு, அரசுக்குப் பரிந்துரை வழங்கி வருகிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 100 அடிக்கு குறையாமல் உள்ள நிலையில், பருவமழை மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் கிடைக்க வேண்டிய நீரும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்படி, நடப்பாண்டு குறுவை, சம்பா பருவங்களுக்கு 232 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை, 8.90 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் 4.41 லட்சம் ஏக்கர் தாளடி சாகுபடி செய்யலாம். குறுவைநடவுப் பணிகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்துவிட வேண்டும். இதற்கேற்ப மும்முனை மின்சாரத்தை அரசு தடையின்றி வழங்க வேண்டும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடவுப் பணிகளைத் தொடங்கினால், அறுவடைக்குத் தயாராகும் நேரத்தில் மழையால் சேதமடைய வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணையில் தற்போது போதிய அளவு நீர் உள்ள நிலையில், ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாக, அதாவது ஜூன் முதல் வாரத்திலேயே பாசனத்துக்காக அணையிலிருந்து தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

குறுவை சாகுபடியின்போது விவசாயிகள், நேரடி நெல் விதைதெளிப்பில் அதிக ஆர்வம் செலுத்தவேண்டும். இதனால், செலவு குறைவதுடன், கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதேபோல, சம்பா சாகுபடிக்கு நீண்டகாலப் பயிர்கள் நடவை, ஆக. 15 முதல் செப்.7-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும். மத்திய கால ரகங்களை, செப்டம்பர் மாதம் முழுவதும் நடவு செய்யலாம்.

மேட்டூர் அணை திறப்பதற்குள் தூர் வாரும் பணிகளை அரசு முடிக்க வேண்டும். அதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சி, டி பிரிவு வாய்க்கால்களை, பாசனதாரர்கள் சங்கம் மூலம் பராமரிக்க வேண்டும்.

பருவ மழைக் காலங்களில் டெல்டாவில் மழை பெய்யத் தொடங்கிய உடன், மேட்டூர் அணையை மூட வேண்டும். இல்லாவிட்டால் நீர் வீணாக வாய்ப்புள்ளது. எனவே, சிக்கனமான நீர்ப் பாசனத்தை மேற்கொள்ள விவசாயிகளும், அதிகாரிகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஓய்வுபெற்ற வேளாண் துணை இயக்குநர் வி.பழனியப்பன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT