கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே இருதரப்பினர் இடையில் நடந்த மோதலை, தனி ஒருவராக தடுத்ததாக தலைமை காவலரை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள ராவுத்தநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோயிலுக்கு கூழ் ஊற்றும் திருவிழா நேற்று முன் தினம் நடந்தது. இதில், ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் கதிரவனுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மாயவன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
கதிரவன் தரப்பினர் தாக்கியதில் மாயவன் பலத்த காயம் அடைந்த நிலையில், இரு தரப்பினர் இடையே பெரும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இந்த மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த வடபொன்பரப்பி தலைமை காவலர் பழனிமுத்து, நிலவரத்தை செல்போனில் வீடியோ எடுத்தபடி இரு தரப்பினரையும் சமாளித்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருத்த கும்பலை அடக்கி, தாக்குதல் எற்படாமல் தனி ஒருவராக நின்று மோதலை தடுத்து நிறுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை காவலர் பழனிமுத்துவின் செயலுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்து, பாராட்டி வெகுமதி வழங்கினார்.
ஆய்வாளருக்கு பாராட்டு: இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, காவல் அவசர உதவிஎண் 100-க்கு வரும் அழைப்புகளை, சமூக அக்கறையோடு உடனுக்குடன் நிவர்த்தி செய்தமைக்கான பணியை பாராட்டி திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாபுவின் செயலை கவுரப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் பாராட்டி நினைவு பரிசை வழங்கினார். அவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.