தமிழகம்

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 216 பேருக்கு இன்று கலைமாமணி விருதுகள்: விருதாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 216 பேருக்கு கலைமாமணி விருதுகளை அரசு வழங்குகிறது. விருதாளர்களுக்கு தனித்தனியாக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம் மற்றும் நாட்டுப்புறக்கலை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருதுக ளும், தமிழுக்கு சிறந்த தொண்டு புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் மாமணி விருதுகளும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக வழங்கப்பட்டு வந்தது.

முன்பு கலைமாமணி விருதுக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 சவரன் தங்க பதக்கம் தரப்படும். தமிழ் மாமணி விருதுக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 சவரன் தங்கப்பதக்கம் தரப்பட்டது. கடந்த 2008-09-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு 46 பேரும், தமிழ்மாமணி விருதுக்கு 6 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி நடந்த விழாவில் அப்போதைய துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் பங்கேற்று விருதுகளை அளித்தார். அப்போது, அவர்களுக்கு விருதுடன்தங்கப்பதக்கம் வழங்கவில்லை. அப்போதே அதுபற்றி கேட்டபோது, ‘தங்கப் பதக்கத்தில் பெயர் பொறித்து தர காலஅவகாசம் தேவை’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஓராண்டு கழிந்தும் தங்கப் பதக்கம் வழங்காததால் விருதுபெற்றவர்கள் ஒன்று சேர்ந்து 2011-ம் ஆண்டில் அப்போதைய தலைமைச் செயலர் சத்திய வதியிடம் முறையிட்டனர். அதற்கு, ‘விருது வழங்கிய காலத்தை விட தற்போது தங்கம் விலை உயர்ந்து விட்டது. எனினும், விரைவில் பதக்கம் தருவோம்’ என தெரிவித்தனர்.

அதன்பிறகு, விருது பெற்ற காலத்தில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப 2 சவரனுக்கான தொகையை கலைமாமணி விருது பெற்ற 46 பேருக்கு மட்டும் அரசு அளித்தது. பின்னர் தங்கப்பதக்கம் தரும் வழக்கத்தை கைவிட்டனர்.

அதைத்தொடர்ந்து புது சர்ச்சை எழுந்தது. அதில் கலைமாமணி விருது பெற்ற 11 பேருக்கு தமிழ் மாமணி விருது தரப்பட்டுள்ளதாக ஆளுநரிடம் புகாரும் தரப்பட்டு, விசாரணையும் நடந்தது.

பின்னர் ஆண்டு தோறும் கலைமாமணி, தமிழ் மாமணி விருதுகள் தரப்படாத நிலை ஏற்பட்டது. கடந்த 2013 முதல் இவ்விருதுகள் தரப்படாததால் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு பொறுப்பு ஏற்றவுடன் இவ்விருதுகளை தர பலரும் கோரிக்கைகள் வைத்து, போராட்டங்களையும் நடத்தி வந்த னர்.

தற்போது 2013 முதல் 2021-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் தர முடிவு எடுக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது 743 விண்ணப்பங்களில் 216 பேருக்கு இன்று கலைமாமணி விருது தரப்படவுள்ளது. இந்நிகழ்வு இன்று கம்பன் கலையரங்கில் நடக்கிறது.

விருதாளர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கடிதத்தை கலைப் பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள் அனுப்பியுள்ளார். வழக்கமாக விருதாளர்கள் பட்டி யல் வெளியிடும் புதுச்சேரி அரசு,இம்முறை மொத்த விருது பட்டியலை இதுவரை அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும், சான்றிதழும் தரப்பட உள்ளதாக அரசு தரப்பில் குறிப்பிட்டனர்.

விருதுகளை தரக்கோரி தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த புதுச்சேரி சிந்தனையாளர் பே ரவைத் தலைவரும் பாரதிதாசனின் பேரனுமான செல்வம் கூறுகையில், "கலைமாமணி விருதுகள் பாரதி தாசன் பிறந்த நாளில் ஆளுநர் வழங்குகிறார். அதேபோல் தமிழ் மாமணி விருதுகள் 7 ஆண்டுகளாக தரவில்லை.

அது தொடர்பாகவும் அறிவிக்க வேண்டும். தமிழ் அறிஞர்களுக்கு கம்பன் புகழ் பரிசு, ஆய்வுக்கு தொல்காப்பியர் விருது, சிறுவர் நூலுக்கு நேரு புகழ் பரிசு தர வேண்டும். புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டும். ஜூனுக்குள் இவற்றை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT