சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையில் வாக்குவாதம் நீடித்ததால் கோபமடைந்த சென்னை மாநகராட்சி மேயர் மாமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஏப்ரல் மாதத்திற்கான சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது நேரமில்லா நேரத்தில் பேசிய 34வது வார்டு அதிமுக உறுப்பினர் சேட்டு, தனது வார்டில் குப்பைகள் சரிவர அப்புறப்படுத்துவதில்லை என்றும் சாலை வசதி, விளையாட்டு திடல் வசதி இல்லாமல் உள்ளதால் மக்களுடன் இணைந்து போராடுவோம் எனவும் தெரிவித்தார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மைக் ஆஃப் செய்யப்படுவது நியாயம் இல்லை எனக் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பேச முயன்றதால் மாமன்ற கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, மேயர், துணை மேயர் குறுக்கிட்டு உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேயர் குறுக்கிட்டுப் பேசியும் அமளி தொடர்ந்ததால் கோபமடைந்த மேயர் பிரியா, அனைவருக்கும் அவையில் பேச சமமாக நேரம் ஒதுக்கப்படுகிறது. மேயர் பேசும்போது அவையில் யாரும் குறுக்கீடு செய்யக் கூடாது என்று கோபத்துடன் எச்சரித்தார். பின்னர் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி அதிமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கிப் பேசினார்.