சென்னை: சூடான் நாட்டில் தற்போது ராணுவம் மற்றும் உள்நாட்டு படையினருக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கிருந்து மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.
தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், அங்குள்ள இந்தியத் தூதரகம் மூலம் கண்டறியப்பட்டு, ‘ஆபரேஷன் காவிரி’ என்ற திட்டத்தின் கீழ், இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று டெல்லி வந்திறங்கியவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் இருந்தனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 3 பேர், வேலூரைச் சேர்ந்த 2 பேர், சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை தமிழக மறுவாழ்வுத் துறை ஆணையரக அதிகாரிகள் வரவேற்றனர். மீதமுள்ள 4 பேர் டெல்லியில் இருந்து மதுரை சென்றனர்.
மீட்பு பணிகள் குறித்து அதிகாரி ஒருவர்கூறும்போது, ‘‘தமிழக அரசின் அறிவுரைப்படி 9 பேரும் தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அடுத்ததாக மும்பை விமானநிலையத்துக்கு 12 பேர் வருகின்றனர். அவர்களையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. கட்டுப்பாட்டறைக்கு இங்குள்ள உறவினர்கள் தகவல் அளிக்கலாம்’’ என்றார்.
சூடானில் இருந்து சென்னை வந்த 9-ம்வகுப்பு மாணவி கூறும்போது, ‘‘ கடந்த 15 தினங்களாக மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த போரால் எனது கல்வி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருந்த இடத்தை பிடிப்பதற்குதான் இரு தரப்பும்சண்டையிடுகின்றனர். இந்திய அம்பாசிடர்முபாரக் எங்களுடன் பேசினார். அவர் இந்திய அரசுடன் பேசி, அவரது ஏற்பாட்டின் பேரில், பேருந்தில் 26 மணிநேரம் மிகுந்தசிரமத்துடன் பயணித்து, விமான நிலையம் வந்தோம். இந்திய விமானப்படை விமானம் மூலம் ஜெத்தா வந்து, அங்கிருந்து இந்திய, தமிழக அரசு டெல்லி அழைத்து வந்தது. தமிழக அரசின் ஏற்பாட்டில் இங்கு வந்துள்ளோம். தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சூடான்சென்ற கிருத்திகா என்பவர் கூறும்போது, ‘‘துப்பாக்கிச் சூடு, கலவரம் என சூடான் ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக நாங்கள் சேர்த்து வைத்த அனைத்தையும் விட்டுவிட்டு, ஒரே ஒரு பையுடன் திரும்பியுள்ளோம். போர் முடிவு பெற்றாலும் மீண்டும் சூடானுக்குச் செல்லும் எண்ணம் இல்லை. எங்களை மீட்ட இந்திய மற்றும் தமிழக அரசுக்கு நன்றி’’ என்றார்.