கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, நோய் மற்றும் பூச்சித் தாக்குதலால் கத்தரி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால், போச்சம்பள்ளி, மத்தூர், கண்ணன்டஹள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கத்தரி சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கத்தரி செடி மற்றும் காய்களில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், மகசூல் பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கத்தரிச் செடியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் - நவம்பர், டிசம்பர்-ஜனவரி, மே-ஜூன் ஆகிய 3 பட்டங்களில் சாகுபடி நடைபெற்று வருகிறது. நடவு செய்த 40-வது நாளில் காய் அறுவடைக்கு வரும். தொடர்ந்து 110 நாட்கள் வரை பலன் கிடைக்கும்.
இங்கு அறுவடை செய்யப்படும் கத்தரிக்காய் உள்ளூர் சந்தைகள் மற்றும் உழவர் சந்தை மற்றும் அறந்தாங்கி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கர்நாடக, ஆந்திர, கேரள மாநிலங்களுக்கும் விற்பனைக்குச் செல்கின்றன. சந்தையில் ஆண்டு முழுவதும் தேவையிருப்பதால், நிலையான வருவாய் உள்ளது. தற்போது, நிலத்தடி நீர் மட்டம் நன்றாக இருப்பதால், இப்பகுதி விவசாயிகள் வழக்கத்தைவிடக் கூடுதல் பரப்பளவில் கத்தரி சாகுபடியில் ஈடுபட்டனர்.
தற்போது, கோடை வெயில் தாக்கம் காரணமாகச் செடிகளில் நோய், பூச்சித் தாக்குதல் அதிகரித்து, செடியிலேயே காய்கள் அழுகி வீணாகி வருகின்றன. பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த 3 முறை மருந்து தெளித்தும் பயனில்லை. இதனால், காய்களை அறுவடை செய்யாமல் விட்டுவிட்டோம்.
எனவே, வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தர வேளாண் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கத்தரி, தக்காளி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.