தமிழகம்

சோழிங்கநல்லூர் - சிப்காட் உயர்மட்ட மெட்ரோ வழித்தட பணி: ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,134 கோடி ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலைய பணிகளுக்கு ரூ.1,134 கோடி மதிப்பில் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோரயில் திட்டம், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், பல பணிகளை செய்ய நிறுவனங்களுக்கு ஒப்பந்தமும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில், சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு ரூ.1,134 கோடியே 11 லட்சம் மதிப்பில் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் ரயில்விகாஸ் நிகம் நிறுவன முதுநிலைதுணைப் பொது மேலாளர் சவுத்ரி ராஜ்னீஷ் குமார் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ``இந்த ஒப்பந்தத்துக்கான நிதி உதவியை ஆசிய வளர்ச்சி வங்கி அளிக்கவுள்ளது. ஒப்பந்தத்தின்படி, உயர்மட்ட வழித்தடம் (சுமார் 10 கி.மீ. நீளம்)மற்றும் சோழிங்கநல்லூர் ஏரி-I, ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் (சோழிங்கநல்லூர்ஏரி-II), சத்தியபாமா பல்கலைக்கழகம் (செம்மஞ்சேரி-I), செம்மஞ்சேரி-II, காந்தி நகர், நாவலூர், சிறுசேரி, சிறுசேரி சிப்காட் -1 மற்றும் சிறுசேரி சிப்காட் -2 ஆகிய 9 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்க வேண்டும்" என்றனர்.

SCROLL FOR NEXT