சென்னை: தமிழகத்துக்கு 6.25 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது எந்த வகையான கரோனா தடுப்பூசியும் கையிருப்பில் இல்லை. அதேவேளையில், தமிழகத்தில் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் தவணையையும், 86 லட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டாம் தவணையையும், 4.42 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.
அதைக் கருத்தில் கொண்டு, காலாவதி காலம் அதிகம் உள்ள 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள், 50 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பூசிகள், 75 ஆயிரம் கோர்பிவேக்ஸ் தடுப்பூசிகள் என 6.25 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறை கூடுதல் ஆணையர் டாக்டர் வீணா தவானுக்கு அண்மையில் தமிழக பொது சுகாதாரத் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இதுவரை அந்த கடிதத்துக்கு பதிலோ அல்லது உத்தரவாதமோ கிடைக்கவில்லை. மாநிலத்தின் தற்போதைய சூழல் கருதி உடனடியாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.