தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்த நிலையிலும் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதற்கு மாறாக குறைந்துள்ளது.
பொதுவாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின்போது (ஜூன் முதல் செப்டம்பர் வரை) அதிக மழை இருக்காது. வெப்பச் சலனம் மற்றும் பிற காரணங்களால் மட்டுமே மழை பெய்யும். அதனால் சொற்ப அளவே மழை கிடைக்கும். ஆனால் இந்தாண்டு இதுவரையில் வழக்கத்தைவிட 30 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதம் தமிழகம் முழுவதும் அதிக மழை பெய்தது.
ஒவ்வொரு மாதமும் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டத்தை கணக்கெடுத்து மாவட்டவாரியான நிலத்தடி நீர்மட்ட விவரங்களை பொதுப்பணித் துறை வெளியிடும். அந்தத் தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது, பல மாவட்டங்களில் ஜூலை மாதத்தில் இருந்த அளவை விட ஆகஸ்ட் மாதத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
வட மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சில மாவட்டங்களில் நீர்மட்டம் அதிகரித்தும், சில மாவட்டங்களில் நீர்மட்டம் குறைந்தும் உள்ளது. தென் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவு உயர்ந்துள்ளது. அந்த மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் 10.59 மீட்டர்களுக்கு கீழ் இருந்த நிலத்தடி நீர்மட்டம், ஆகஸ்ட் மாதத்தில் 5.45 மீட்டர்களாக அதிகரித்து உள்ளது.
இந்த ஆண்டு 30 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ள நிலையில், கடந்த ஆண்டு 20 சதவீத குறைவான மழை பெய்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத நிலத்தடி நீர்மட்டத்தை ஒப்பிடும்போது இந்தாண்டு ஆகஸ்ட் மாத நிலத்தடி நீர்மட்டம் மோசமான நிலையில் உள்ளது.
இந்த நிலையில், பெய்யும் மழையை முறையாக சேமித்து வைப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதை மீண்டும் கட்டாயமாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.